
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறிந்து தயாராக உதவும் இத்தொடரில் இந்தியாவின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் 14 மாதங்கள் கழித்து இந்த டி20 தொடரில் தேர்வாகியுள்ளார்.
கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடியிருந்த அவர்கள் மேற்கொண்டு டி20 கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்து வந்தனர். அதனால் அவர்களின் டி20 கேரியர் முடிந்ததாகவும் 2024 டி20 உலகக் கோப்பையில் அவர்கள் விளையாட மாட்டார்கள் என்றும் செய்திகள் வெளியானது ரசிகர்களை சோகமடைய வைத்தது. அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான புதிய இளம் அணி விளையாடும் என்றும் செய்திகள் வலம் வந்தன.
இருப்பினும் ஹர்திக் பாண்டியா காயத்தை சந்தித்து வெளியேறியுள்ள நிலையில் தற்போது மீண்டும் திரும்பியுள்ள ரோஹித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பையில் கேப்டனாக விளையாடுவது உறுதியாகியுள்ளது. இதை தொடர்ந்து 14 மாதங்கள் கழித்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த தொடரில் விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.