
ஐசிசி-யின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளும் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன். அந்தவகையில் இத்தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகளூம் அதிகரித்துள்ளது.
அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிவரும் வீரர்களின் ஃபார்மின் அடிப்படையிலேயே இந்திய அணி தேர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பிடிக்க வேண்டும் எனில் அவர் தொடர்ச்சியாக பந்துவீச வேண்டும் என இந்திய அணியின் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் டிராவிட் அடங்கிய குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் ஹ்ர்திக் பாண்டியா பேட்டிங்கில் ஓரளவு செயல்பட்டாலும், அவரது பந்துவீச்சானது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. அதன்படி இந்த சீசனில் அவர் விளையாடியுள்ள 6 போட்டிகளில் நான்கு போட்டிகளில் மட்டுமே பந்துவீசியுள்ளார். ஆனால் அந்த நான்கு போட்டிகளிலும் அவரது பந்துவீச்சில் ரன்கள் வாரி வழங்கியுள்ளார் என்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளனது.