
இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று நாடு திரும்பியுள்ள வேளையில் அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதல் இரண்டு போட்டிகளை தவிர்த்து மூன்றாவது போட்டியில் ஓய்வில் இருக்கும் வீரர்கள் அனைவரும் அணிக்கு திரும்புகின்றனர். இந்நிலையில் இந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரின் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்? என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது.
இவ்வேளையில் முதல் இரண்டு போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் கண்டிப்பாக விளையாடுவார் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை உலகில் நம்பர் 1 வீரராக மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.