
ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், ஒருநாள் தொடரை ஆஃப்கானிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நடைபெறவுள்ளது.
அதன்படி ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி மார்ச் 15ஆம் தேதி ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காயம் காரணமாக இந்தியா, இலங்கை தொடர்களிலிருந்து விலகிய ரஷித் கான் மீண்டும் அணியில் இணைந்ததுடன், அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருடன் முஜிப் உர் ரஹ்மான், முகமது நபி, நூர் அஹ்மத், கைஸ் அஹ்மத், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் போன்ற நட்சத்திர வீரர்களும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். மேலும் நடப்பு ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு தயாராகும் வகையில் ஆஃப்கானிஸ்தான் அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அந்தவகையில் ரஷித் கான் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.