
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் வரும் 11ஆம் தேதி தொடங்குகிறது. டி20 உலக கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்பு கடைசியாக இந்தியா விளையாடும் ஒரே தொடர் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய அணி நேற்று அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆஃப்கானிஸ்தான் அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த அணியில் உள்ள சீனியர் வீரர்களுக்கும் கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் நவீன் உல் ஹக், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் அனைவருமே இடம் பிடித்திருக்கிறார்கள். அனுபவ வீரர் இப்ராஹிம் சாரன் இந்த தொடரில் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹஸ்மதுல்லா ஷாஹிதி இந்த தொடரில் சாதாரண வீரராக தான் விளையாடுகிறார்.