
ஐசிசி தரவரிசை பட்டியல் வாரம் வாரம் மாறிக்கொண்டே வரும் நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் முன் எப்போதும் இல்லாத அளவு முதலிடத்தில் இரண்டு வீரர்கள் உள்ளனர். கடந்த வாரம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளருக்கான பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.
இந்த நிலையில் இந்தூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அஸ்வின் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அஸ்வினின் 6 புள்ளிகள் குறைந்து தற்போது 859 புள்ளிகள் உடன் முதல் இடத்தை இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் பகிர்ந்து கொண்டு உள்ளார். ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ், கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடத காரணத்தால் அவர் 849 புள்ளிகளுக்கு சரிந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
இதேபோன்று தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா மூன்று இடங்கள் முன்னேறி நான்காவது இடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ரபாடா எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று இந்தூர் டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லையன் ஐந்து இடங்கள் முன்னேறி தற்போது ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார்.