‘தாங்கள் விளையாடிய காலத்தில்..’- ஹர்பஜன் கருத்துக்கு அஸ்வின் பதிலடி!
தாங்கள் விளையாடிய காலத்தில் அப்படி இப்படி என்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இந்தப் பழக்கம் இந்தியாவில் குறைந்தபட்சம் நம் தமிழ்நாட்டிலாவது ஒழிக்கப்பட வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி தொடர்ந்து நான்காவது முறையாக பார்டர் கவாஸ்கர் டிராபியை தக்கவைத்து சாதனை படைத்தது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய முன் வரிசை பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த அளவு விளையாடாத நிலையில், சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் அக்சர், அஸ்வின், ஜடேஜா மூவரும் பந்துவீச்சு பங்களிப்போடு பேட்டிங் பங்களிப்பையும் மிகச் சிறப்பாக செய்தனர்.
நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 25 விக்கெட் கைப்பற்றிய அஸ்வினும் 22 விக்கெட்டுகள் கைப்பற்றிய ரவீந்திர ஜடேஜாவும் தொடர் நாயகன் விருதை சேர்ந்து பெற்று பகிர்ந்து கொண்டார்கள். இந்தத் தொடருக்கு முன்பு இருந்தே இந்திய அணியின் முன்னாள் பிரபல சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் இப்பொழுது அமைக்கப்படும் ஆடுகளங்கள் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கிறது என்றும், தங்கள் காலத்தில் இருந்த அளவுக்கு கடினம் ஒன்றும் இல்லை என்றும், அதனால் இவர்களால் எளிதாக விக்கெட் வீழ்த்த முடிகிறது என்றும் பேசி வந்தார்.
Trending
தற்பொழுது இதற்கு பதில் தரும் விதமாக பேசி உள்ள அஷ்வின், “டாட் மர்ஃபி மிகச் சிறப்பாக பந்து வீசினார். இவரை முன்வைத்து ஒரு விஷயம் சொல்ல வேண்டும். ஒரு புதிய தலைமுறை வந்து பழைய தலைமுறையை விட மிகச் சிறப்பாக எப்பொழுதும் செயல்படும். நாம் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் இந்தியாவில் அப்படியே தமிழ்நாட்டில் ஒரு சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் இருக்கிறது. அவர்களை அந்த இடத்தில் மக்கள் வைத்து விடுகிறார்கள். அவர்களும் தங்களை அப்படியே கடைசி வரை நினைத்துக் கொள்கிறார்கள்.
என்னுடைய துறையில் இப்படியானவர்கள் தங்கள் விளையாடும் காலங்களில் தாங்களே கிங், கிரேட், பிஸ்தா என்று நினைத்துக் கொண்டு அப்படியே ஓய்வும் பெற்று விடுகிறார்கள். அதற்குப் பிறகு தாங்கள் விளையாடிய காலத்தில் அப்படி இப்படி என்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இந்தப் பழக்கம் இந்தியாவில் குறைந்தபட்சம் நம் தமிழ்நாட்டிலாவது ஒழிக்கப்பட வேண்டும்.
நமக்கு அடுத்து வருகின்ற தலைமுறை நம்மை விட சிறப்பாக ஒரு விஷயத்தில் செயல்படும், இது தொடர்ச்சியாக நடக்கக்கூடிய ஒன்று என்கின்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் நாம் வாழும் வாழ்க்கை காலத்தை சந்தோசமாக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த காலத்தில் அவர் பந்தை கையில் எடுத்தால் அப்படியே போட்டுக் கொண்டே இருப்பார் என்றெல்லாம் சொல்வார்கள். கடினமாக உழைக்கக்கூடிய எந்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களும் இதைத்தான் செய்வார்கள். அந்த கால வீரர்கள் மட்டுமே இதை செய்ய மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now