ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடர் எதிவரும் நவம்பர் 22 முதல் பெர்த்தில் தொடங்குகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ள தொடரில், அனைவரது பார்வையும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பக்கம் திரும்பியுள்ளது.
ஏனெனில் சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான ஃபார்மில் இருந்து வரும் விராட் கோலி, இத்தொடரின் மூலம் தனது ஃபார்மை மீட்டெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த தொடரில் அவர் பேட்டிங் மூலம் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விராட் கோலி படைக்கவுள்ள சில சாதனைகளை இந்த பதிவில் பார்ப்போம்.
1. ஆஸ்திரேலியாவில் சச்சின் டெண்டுல்கரை முறியடித்து, டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1,809 டெஸ்ட் ரன்களை எடுத்துள்ளார். அதேசமயம் விராட் கோலி தற்போது 13 டெஸ்ட் போட்டிகளில் 54.08 சராசரியில் 1,352 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் இத்தொடரில் விராட் கோலி மேலும் 458 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.