
ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் தொடரானது இந்தாண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி பங்கேற்கும் இந்த தொடரில் ராபின் உத்தப்பா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டிக்கான அணியில் மொத்தம் 7 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணி குறித்த இந்த தகவல் கிரிக்கெட் ஹாங்காங் சிக்ஸஸ் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிட்டுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ராபின் உத்தப்பாவை தவிர, முன்னாள் வீரர்கள் கேதர் ஜாதவ், மனோஜ் திவாரி, ஷாபாஸ் நதீம், பாரத் சிப்லி, ஸ்ரீவத்சா கோஸ்த்வாமி, ஸ்டூவர்ட் பின்னி போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தற்போது 38 வயதான ராபின் உத்தப்பா இந்திய அணிக்காக 46 ஒருநாள் மற்றும் 13 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இது மட்டுமின்றி, 142 முதல் தர போட்டிகளிலும், 203 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் ராபின் உத்தப்பா விளையாடிய அனுபவத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் இந்திய அணியானது தங்களது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையடாவுள்ளது குறிப்பிடத்தக்கது.