
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் 2024 ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஐசிசி இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக 2024 ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர் மற்றும் வீராங்கனைகளை உள்ளடக்கிய ஆண்டின் சிறந்த டி20 அணியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இதில் ஆடவருக்கான டி20 அணியின் கேப்டனாக இந்தியாவின் ரோஹித் சர்மா, மகளிர் டி20 அணிக்கான கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் ஆடவர் அணியில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு வீரர்களும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்பே, இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளைச் சேர்த்த தல ஒரு வீரரும் இடம்பிடித்துள்ளன. இந்த அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் இடத்தில் பில் சால்டும், நான்காம் இடத்தில் பாபர் ஆசமும், ஐந்தாம் இடத்தில் நிக்கோலஸ் பூரனும் இடம்பிடித்துள்ளனர்.