
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்டதொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் டாட் மர்ஃபி என்ற ஸ்பின்னர் அறிமுகமானார்.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் இன்னிங்ஸின் 2ஆவது ஓவரில் உஸ்மான் கவாஜாவை ஒரு ரன்னுக்கு எல்பிடபிள்யூ செய்து அனுப்பினார் முகமது சிராஜ். அதற்கடுத்த ஓவரிலேயே டேவிட் வார்னரின் ஸ்டம்ப்பை கழட்டி எறிந்து ஒரு ரன்னில் வெளியேற்றினார் ஷமி.2 ரன்னுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட ஆஸ்திரேலிய அணிக்கு, அதன்பின்னர் மார்னஸ் லபுஷேனும் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொண்டு சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
முதல் 3 ஓவரில் 2 விக்கெட்டை ஆஸ்திரேலிய அணி இழந்த நிலையில், அதன்பின்னர் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட்டை இழக்காமல் ஸ்மித் - லபுஷேன் ஜோடி ஆடியது. உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 76 ரன்கள் அடித்திருந்தது. மதிய உணவு இடைவேளை முடிந்து, அடுத்த 4வது ஓவரில் மார்னஸ் லபுஷேனை அபாரமான சுழலின் மூலம் ஜடேஜா வீழ்த்தினார்.