இந்திய பிளேயிங் லெவனில் கேஎல் ராகுல் இடம்பிடிப்பாரா? - ரோஹித் சர்மா பதில்!
வங்கதேச தொடரில் கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான் ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது. இப்போட்டிக்கான இரு அணி வீரர்களையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. மேற்கொண்டு இரு அணி வீரர்கள் தற்சமயம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, வங்கதேச தொடரில் கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான் ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கேஎல்ராகுல் எப்படிப்பட்ட சிறந்த வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்திய அணியின் தரப்பிலிருந்து அவர் அனைத்துப் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகிறோம்.
Trending
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கேஎல் ராகுல் சதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 80 ரன்கள் குவித்தார். அதன் பின் அவருக்கு காயம் ஏற்பட்டது. துரதிருஷ்டவசமாக, அவரால் அதன் பின் நடைபெற்ற போட்டிகளில் விளையாட முடியவில்லை. இருப்பினும் அவர் தனது கடைசி போட்டியின் போது எப்படியான ஃபார்மில் இருந்தாரோ அதே ஃபார்மில் அவர் வங்கதேசத்து எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார்.
சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் வேகப் பந்துவீச்சாளர்கள் என இரு தரப்பிற்கு எதிராகவும் சிறப்பாக விளையாடும் திறன் பெற்றவர் கேஎல் ராகுல். அதனால், அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்க முடியும் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். தற்போது, அவருக்கு தேவனையான வாய்ப்புகளும் இருக்கின்றன. அதனை அவர் தக்கவைக்க தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த சர்ஃப்ராஸ் கான், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தொடரில் கேஎல் ராகுல் காயம் காரணமாக வெளியேறியதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவுக்காக இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சர்ஃப்ராஸ் கான் 50 சராசரியில் 200 ரன்கள் எடுத்துள்ளார். இருப்பினும், தற்போது கேஎல் ராகுல் காயத்திலிருந்து மீண்டுள்ளதால் சர்ஃப்ராஸ் கானின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய அணி: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் , ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.
Win Big, Make Your Cricket Tales Now