சிக்ஸர் அடிப்பதில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா!
டி20 கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்களை அடித்த முதல் இந்தியர் மற்றும் ஆசியர் என்ற சாதனைகளை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அந்தவகையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த காத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்துமுதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் அடித்தது. இதில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 69 ரன்களும், ஷிவம் தூபே 66 ரன்களும், கடைசி ஓவரில் களமிறங்கிய எம்எஸ் தோனி 4 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர் உட்பட 20 ரன்களும் குவித்து அசத்தினர். மும்பை அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Trending
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா சதமடித்து அசத்தினார். ஆனால் மற்ற வீரர்கள் சொதப்பியதால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 11 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 105 ரன்களைச் சேர்த்தார். இப்போட்டியில் அவர் 5 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் தனது 500 சிக்ஸர்களையும் விளாசினார். இதன்மூலம் ஆசிய அளவில் டி20 கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்களை விளாசிய முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
இதுவரை 419 இன்னிங்ஸில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 502 சிக்ஸர்களை அடித்துள்ளார். இதன்மூலம், உலகளவில் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் 5ஆம் இடத்தை ரோஹித் சர்மா பிடித்துள்ளார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்கள் கிறிஸ் கெயில், கீரென் பொல்லார்ட், ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள்
- கிறிஸ் கெயில் - 1056 சிக்ஸர்கள்
- கீரென் பொல்லார்ட் - 860 சிக்ஸர்கள்
- ஆண்ட்ரே ரஸல் - 678 சிக்ஸர்கள்
- காலின் முன்ரோ - 548 சிக்ஸர்கள்
- ரோஹித் சர்மா - 502 சிக்ஸர்கள்*
Win Big, Make Your Cricket Tales Now