
இந்திய அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இலங்கை அணியானது 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 27 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா, இலங்கை அணிகளைச் சேர்ந்த வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். அதன்படி ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். முன்னதாக ஷுப்மன் கில் இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில் தற்சமயம் ரோஹித் சர்மா அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசம் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இந்திய அணியின் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் தொடர்கின்றார். மேற்கொண்டு அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டரும் ஒரு இடம் முன்னேறி ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிஷங்காவும் ஒரு இடம் முன்னேறி 8ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.