
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. இதன்மூலம் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
மேலும் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் வீராட் கோலியும், அவரைத்தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் அறிவித்தனர். இந்திய கிரிக்கெட்டின் இருபெரும் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த செய்தியானது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
மேலும் தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய ரோஹித் சர்மா, “இதுவே என்னுடைய இறுதி போட்டி. ஓய்வு பெற இதனை விட மிக சிறந்த தருணம் இல்லை. கோப்பையை வெல்ல வேண்டும் என்று மிக அதிகம் விரும்பினேன். அதனை வார்த்தைகளால் கூறுவது மிக கடினம். இதுவே நான் விரும்பியது. அது நடந்து விட்டது. என்னுடைய வாழ்க்கையில் இது கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லாமல் இருந்தேன். இந்த முறை அதனை நாங்கள் கடந்திருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்திருந்தார்.