
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி தாவ்ஹித் ஹிரிடோய் - ஜக்கர் அலியின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக தாவ்ஹித் ஹிரிடோய் 100 ரன்களையும், ஜக்கர் அலி 68 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை அதிரடியாஅன தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய ரோஹித் சர்மா 7 பவுண்டரிகளுடன் 41 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ரோஹித் சர்மா சிறப்பு சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதன்படி அவர் இப்போட்டியில் 13 ரன்களைச் சேர்த்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 11ஆயிரம் ரன்களைக் கடந்து அசத்தினார்.