
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 399 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 69.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 292 ரன்களுக்கு ஆல அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இப்போட்டியை வென்றதுடன், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது.
இப்போட்டியில் அபாரமாக செயல்பட்டு முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இப்போட்டியின் வெற்றிக்குபின் பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, வெற்றிக்கு காரணமாக இருந்த ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் யஷஸ்வி ஜெய்வாலை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஜஸ்ப்ரித் பும்ரா எங்கள் அணியின் சாம்பியன் வீரர். இதுபோன்ற போட்டிகளில் அவர் தொடர்ந்து தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்து வருகிறார். நாங்கள் இப்போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம் என நினைக்கிறேன். இதுபோன்ற மைதானங்களில் நீங்கள் டெஸ்ட் போட்டியை வெல்வது அவ்வளவு எளிது கிடையாது. இந்த போட்டியை பந்துவீச்சாளர்கள் முன்னின்று எடுத்துச்செல்ல வேண்டும் என்று கூறினேன். அவர்களும் அதனை சரியாக செய்து முடித்துள்ளனர்.