1-mdl.jpg)
ஆஸ்திரேலிய - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால், இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு சிறப்பான சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.
இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா மேற்கொண்டு 3 சிக்ஸர்களை அடித்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற சாதனையை படைப்பார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 90 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளர். அதேசமயம் ரோஹித் சர்மா இதுவரை 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 88 சிக்சர்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.