விராட் கோலிக்கு பதிலாக புஜாரா, ரஹானேவை தேர்வு செய்யாதது ஏன்? - ரோஹித் சர்மா விளக்கம்!
நாங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படுவதால் விராட் கோலிக்கு பதிலாக புஜாரா மற்றும் ரஹானேவை மீண்டும் அணியில் எடுக்க நாங்கள் விரும்பவில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நாளை (ஜன.25) ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக இத்தொடர் இருப்பதால இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் விலகியுள்ளதாக அறிவித்தார். அதனைத்தொடர்ந்து அவருக்கு மாற்றாக எந்த வீரர் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜத் பட்டிதார் அணியில் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளார்.
Trending
இந்தநிலையில், விராட் கோலிக்கு பதிலாக புஜாராவிற்கு இந்திய அணியில் இடம் கொடுக்காததற்கான காரணத்தையும், ராஜத் பட்டிதார் தேர்வு செய்யப்பட்டத்திற்கான காரணத்தையும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளக்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படுவதால் விராட் கோலிக்கு பதிலாக புஜாரா மற்றும் ரஹானேவை மீண்டும் அணியில் எடுக்க நாங்கள் விரும்பவில்லை.
அதற்கு பதிலாக இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுப்பதே சரியாக இருக்கும். இதன் காரணமாகவே சீனியர் வீரர்களான ரஹானே மற்றும் புஜாராவிற்கு இந்திய அணியில் இடம் கொடுக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக சட்டேஷ்வர் புஜாரா நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now