
ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்ளும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளூக்கு நாளு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணமே உள்ளன. அதன்படி 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
இத்தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்து அணியை எதிர்த்து களமிறங்கவுள்ளது. இந்த போட்டி நியூ யார்க்கில் உள்ள நாசவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் அடங்கிய இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இந்த அணியில் விராட் கோலி, சஞ்சு சாம்சன், சூரயகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு டி20 உலகக்கோப்பை தொடரை வெல்லமுடியாமல் தடுமாறிவரும் இந்திய அணியானது நடப்பு உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.