
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இந்தியா தங்களுடைய முதல் 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்ற அசத்தி வருகிறது. மேலும் தற்போதைய அணியில் விராட் கோலி முதல் ஷமி வரை அனைத்து வீரர்களும் மிகச்சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருப்பதால் 2011 போல கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இந்த வெற்றிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் வேலைகளை மிகச் சிறப்பாக செய்து பேட்ஸ்மேனாக தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடி முக்கிய பங்காற்றி வருகிறார் என்றே சொல்லலாம். முன்னதாக 2017 முதல் 3 விதமான கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி இருதரப்பு தொடர்களில் வெளிநாடுகளில் மகத்தான வெற்றிகளை பெற்றுக் கொடுத்தும் உலகக்கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பதால் விமர்சனத்திற்கு உள்ளானார்.
அதனால் டி20 கேப்டன்ஷிப் பதவியை மட்டும் ராஜினாமா செய்த அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்வதாக அறிவித்தார். அப்போது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிக்கு 2 கேப்டன்கள் தேவையில்லை என்று கருதிய அப்போதைய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி மற்றும் தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா ஆகியோர் விராட் கோலியின் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியை பறித்தனர்.