ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீப் போட்டியில் நெதர்லாந்தை 160 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றடித்த இந்தியா 9 போட்டிகளில் 9 வெற்றிகளை பதிவு செய்தது. பெங்களூருவில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 411 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரோஹித் சர்மா 61, கில் 51, விராட் கோலி 51, ஸ்ரேயாஸ் ஐயர் 128, ராகுல் 102 என டாப் 5 பேட்ஸ்மேன்களும் 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து உலக சாதனை படைக்க உதவினார்கள். அதை தொடர்ந்து சேஸிங் செய்த நெதர்லாந்து முடிந்தளவுக்கு போராடியும் 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்து ஆறுதல் வெற்றியை பதிவு செய்ய முடியாமல் வெளியேறியது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக தேஜா நிதமானரு 54 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா, ஜடேஜா, சிராஜ், குல்தீப், ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அந்த வகையில் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு கொடுத்த இந்தியா சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரில் தோல்வியே சந்திக்காமல் நாக் அவுட் சுற்றில் விளையாட தயார் என்று எதிரணிகளுக்கு காண்பித்துள்ளது.