
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ச் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 5ஆவது வெற்றியைப் பெற்றதுடன் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய டிரென்ட் போல்ட் ஆட்ட்நாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பு சாதனைகளை படைத்துள்ளார்.
அதன்படி இப்போட்டியில் ரோஹித் சர்மா அரைசதம் கடந்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் தனது 12000 ரன்களை நிறைவு செய்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 12000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த உலகின் எட்டாவது வீரர் மற்றும் இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மட்டுமே டி20 கிரிக்கெட்டில் 12000 ரன்களைக் கந்துள்ளார்.