-mdl.jpg)
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் நிலையில், இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு பலப்பரீட்சை நடத்துகின்றன. மேலும் இத்தொடரின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் அமெரிக்கா - கனாடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அதேசமயம் இந்திய அணி இடம்பிடித்துள்ள குழுவில், பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, அயர்லாந்து அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்நிலையில் இத்தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏனெனில் கடந்த ஓராண்டு காலமாக இந்திய டி20 அணியைப் பொறுத்தவரையில் பல்வேறு வீரர்கள் பரிசோதனை முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இத்தொடருக்கான கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்திருந்தன. ஏனெனில் கடந்த 2022ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா, ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் கேப்டனாக நியமிக்கப்பட்டனர். அதேசமயம் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றோர் டி20 அணியில் தேர்வு செய்யப்படாமல் இருந்ததால் ஹர்திக் பாண்டியா தான் டி20 அணியின் கேப்டனாக பார்க்கப்பட்டார்.