
கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியதை அடுத்து, மூன்று வடிவிலான இந்திய அணியின் கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். மேற்கொண்டு அவரின் கேப்டன்சி கீழ் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்தும் அசத்தியது.
அதிலும் குறிப்பாக கடந்த 2023ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை இந்திய அணியை அழைத்துச் சென்றது, ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை சாம்பியனாக்கியது என பல்வேறு சாதனைகளைக் குவித்துள்ளார். ஆனால் அதன்பின் நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி படுத்தோல்வியைச் சந்தித்தது.
இதனால் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறித்த கேள்விகள் அதிகரித்தன. ஆனால் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்தியதுடன் அணிக்கு சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்து தனது கேப்டன்சியை நிரூபித்துள்ளார். ஆனாலும், அவர் இன்னும் டெஸ்ட் வடிவத்தில் பெரிய வெற்றியை எதிர்பார்க்கிறார். இருப்பினும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற தவறிவுள்ளதால், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.