
பர்மிங்ஹாம் நகரில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் 5ஆவது டெஸ்ட் போட்டி இறுதி நாளை எட்டியுள்ளது. 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி கடந்த ஜூலை 1ஆம் தேதியன்று துவங்கியது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் போராடி 416 ரன்கள் சேர்த்தது. கில், புஜாரா, விராட் கோலி உட்பட முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 98/5 என திண்டாடிய இந்தியாவுக்கு 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் சதமடித்து 146 ரன்களும் ரவீந்திர ஜடேஜா சதமடித்து 104 ரன்களும் குவித்தனர்.
கடைசி நேரத்தில் ஸ்டுவர்ட் ப்ராட் வீசிய ஒரே ஓவரில் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா 35 ரன்களை பறக்கவிட்டு உலக சாதனை படைத்தார். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து இந்திய பவுலர்களின் தரமான பந்துவீச்சில் வெறும் 284 ரன்களுக்கு சுருண்டது.