
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், இந்திய அணியின் தொடக்க வீரராகவும் அறியப்படுபவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் இந்திய அணிக்காக இதுவரை 23 டி20 போட்டிகளிலும் 6 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிவுள்ளார்.
இதில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்களுடன் 633 ரன்களையும், 6 ஒருநாள் போட்டிகளில் ஒரு அரைசதத்துடன் 115 ரன்களையும் எடுத்துள்ளார். இருப்பினும் ஒவ்வொரு முறையும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அவர் டி20 கிரிக்கெட்டில் சதமடித்த நிலையிலும் அவரது இடம் இந்திய அணியில் நிலைத்தன்மை இல்லாமல் உள்ளது.
மேற்கொண்டு நடப்பு ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்ட அவர், தொடரின் பாதியில் காயம் காரணமாக விலகினார். அதன்பின் தற்போது இங்கிலாந்து சென்றுள்ள இந்திய ஏ அணியின் ஒரு அங்கமாக ருதுராஜ் கெய்க்வாட் இருக்கும் நிலையிலும், அவருக்கு பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பானது கிடைக்கவில்லை. இதனால் இந்திய அணியில் தனக்கான இடத்தை உறுதிசெய்யும் முயற்சியில் ருதுராஜ் ஆர்வம் காட்டி வருகிறார்.