
தென் ஆப்பிரிக்காவுக்கு நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா 2வது இன்னிங்ஸில் அதை விட மோசமாக 131 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது.
அத்துடன் பும்ரா, சிராஜ் ஆகியோரை தவிர்த்து பிரசித் கிருஷ்ணா, சர்துல் தாகூர் ஆகியோர் ரன்களை வாரி வழங்கி தோல்விக்கு காரணமாக அமைந்ததும் ரசிகர்களை கடுப்பாக வைத்தது. அதனால் தென்னாபிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கனவு மீண்டும் கனவாக போயுள்ளது.
முன்னதாக இத்தொடருக்கு முன்பாக பயிற்சி போட்டியில் விளையாடாத இந்திய அணியினர் தங்களுக்குள்ளேயே குழுவாகப் பிரிந்து இன்ட்ரா ஸஃகுவாட் பயிற்சிகளை மட்டுமே செய்தனர். இந்நிலையில் சவாலான தென் ஆப்பிரிக்க மண்ணில் வெற்றி பெறுவதற்கு முன்கூட்டியே சென்று இந்திய அணியினர் ஒரு பயிற்சி போட்டியில் கூட விளையாடாததே தோல்விக்கு காரணம் என்று முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.