
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 19) கேப்டவுனில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் மற்றும் அப்துல்லா ஷஃபிக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அப்துல்லா ஷஃபிக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து 25 ரன்கள் எடுத்த கையோடு சையும் அயூப்பும் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் உயர்த்தினர்.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்தனர். பின் இப்போட்டியில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 7 பவுண்டரிகளுடன் 73 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முகமது ரிஸ்வானும் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 80 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனையடுத்து இணைந்த சல்மான் அலி அகா மற்றும் காம்ரன் குலாம் இணையும் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.