தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜனவரி 03) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பந்துவீச அழைத்தார்.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் ஐடன் மார்க்ரம் 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வியான் முல்டர் 5 ரன்களுக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 72 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது.
அதன்பின் ரியான் ரிக்கெல்டனுடன் இணைந்துள்ள கேப்டன் டெம்பா பவுமா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் ரிக்கெல்டன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தையும் மறுபக்கம் கேப்டன் டெம்பா பவுமா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 4ஆவது சதத்தையும் பதிவுசெய்தனர். அதன்பின் 106 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டெம்பா பவுமா தனது விக்கெட்டை இழந்தார்.