எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது பார்ல் ராயல்ஸ்!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் மேத்யூ பிரீட்ஸ்கி இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மேத்யூ பிரீட்ஸ்கி 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடிய குயின்டன் டி காக்கும் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 43 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்ததுடன், தனது அரைசதத்தைப் பதிவுசெய்யும் வாய்ப்பையும் இழந்தார்.
Trending
அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசென் 5 ரன்களிலும், மற்றொரு நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் 3 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த வியான் முல்டர் மற்றும் ஜேஜே ஸ்மட்ஸ் ஆகியோரும் நிதானமாக விளையாட அணியின் ரன் வேகமும் சரியத்தொடங்கியது. ஆனால் இறுதியில் ஜேஜே ஸ்மட்ஸ் அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில் 5 பவுண்டரிகளுடன் 33 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதேசமயம் மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வியான் முல்டர் 24 ரன்களைச் சேர்க்க, டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்களை மட்டுமே சேர்த்தது. பார்ல் ராயல்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பார்ல் ராயல்ஸ் அணியில் நட்சத்திர வீரர் ஜோ ரூட் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் பிரிட்டோரியஸுடன் இணைந்த ருபின் ஹர்மன் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் பிரிட்டோரியஸ் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் ஹர்மனுடன் இணைந்த வான் பியூரனும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹர்மன் 44 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மிட்செல் வான் பியூரன் 41 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் டேவிட் மில்லர் 24 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தாலும் பார்ல் ராயல்ஸ் அணி 17.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஜோர்ன் ஃபோர்டுயின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Win Big, Make Your Cricket Tales Now