T20 WC 2024: ஹசரங்காவின் விக்கெட் சாதனையை முறியடித்த லமிச்சானே!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது வீரர் எனும் சாதனையை நேபாள் அணி வீரர் சந்தீப் லமிச்சானே படைத்துள்ளார்.

வங்கதேசம் - நேபாள் அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை லீக் போட்டி இன்று செயின் வின்செண்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது தொடக்கத்தில் இருந்தே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் அந்த அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 17 ரன்களை எடுத்திருந்தார். நேபாள் அணி தரப்பில் சோம்பால் கமி, தீபேந்திர சிங் ஐரி, கேப்டன் ரோஹித் பௌடல், சந்தீப் லமீச்சானே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நேபாள் அணியிலும் டாப் ஆர்டர் வீரர்கள் குஷால் புர்டெல், அனில் ஷா, ஆசிஃப் ஷேக், ரோஹித் பௌடல், சந்தீப் ஜோரா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் அணிக்கு நம்பிக்கையளித்த குசால் மல்லா 27 ரன்களிலும், திபேந்திர சிங் ஐரி 25 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அதன்பின் களமிறங்கிய நேபாள் அணி வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் நேபாள் அணியானது 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்கதேச அணியானது 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் நேபாள் அணி வீரர் சந்தீப் லமிச்சானே 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 100ஆவது விக்கெட்டை பூர்த்தி செய்தார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையையும் சந்தீப் லமிச்சானே படைத்துள்ளார். முன்னதாக இலங்கை அணி வீரர் வநிந்து ஹசரங்கா 63 இன்னிங்ஸ்களில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
அதனைத் தற்போது சந்தீப் லமிச்சனே 54 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி முறியடித்து அசத்தியுள்ளார். இந்த பட்டியளில் ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் 53 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் நீடித்து வருகிறார். மேற்கொண்டு பாகிஸ்தானின் ஹாரிஸ் ராவுஃப், அயர்லாந்தின் மார்க் அதிர், ஓமனின் பிலால் கான் ஆகியோர் நான்கு மற்றும் 5ஆம் இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now