
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் ரஜத் படிதார் தலைமையிலான ரயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி தங்களின் முதல் சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கி இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பிளேயிங் லெவனை தேர்வுசெய்துள்ளார். அதன்படி அவர் தனது அணியின் தொடக்க வீரர்களாக நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களைக் குவித்த வீரரான சாய் சுதர்ஷன் மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி உள்ளிட்டோரை தேர்வு செய்துள்ளார். இதில் சுதர்ஷன் 759 ரன்களையும், விராட் கோலி 657 ரன்களையும் எடுத்துள்ளார்.
அணியின் மிடில் ஆர்டரில், லக்னொ சூப்பர் ஜெயண்ட்ஸின் நிக்கோலஸ் பூரன், பஞ்சாப் கிங்ஸின் ஸ்ரேயாஸ் ஐயர், மும்பை இந்தியன்ஸின் சூர்யகுமார் யாதவ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஹென்ரிச் கிளாசென் ஆகியோரை சேர்த்துள்ளதுடன், அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை நியமித்துள்ளார். அதன்பின் அவர் தனது அணியில் மீதமுள்ள இடங்களுக்கு பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்.