
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் ஆட்ட அணுகுமுறை மிக மோசமாக இருந்தது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, துணை கேப்டன் கே எல் ராகுல் இருவரது ஆட்டத்திலும் தைரியமும் நம்பிக்கையும் காணப்படவில்லை.
டி20 உலக கோப்பைக்கு முன்பாக புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா அதிரடியான ஆக்ரோஷமான முறையில் விளையாடுவதை அணியின் கலாச்சாரமாக மாற்றுவோம் என்று கூறி அதன்படியே விளையாடியும் வந்தார்கள். ஆனால் அதை ஆஸ்திரேலியாவில் கொண்டு வந்து செயல்படுத்த தவறி மொத்த அணியையும் அரை இறுதியில் படுதோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறினார்கள்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் மெதுவாக விழித்துக் கொண்டது. இதன் தொடர்ச்சியாக இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக கொண்டுவரப்பட்டதோடு ஒரு நாள் போட்டி அணிக்கும் துணை கேப்டனாக கொண்டுவரப்பட்டு இருக்கிறார். மேலும் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் டி20 போட்டி அணியில் சேர்க்கப்படவில்லை. அதேபோல் மூத்த வீரர்களான சிகர் தவன் புவனேஸ்வர் குமார் போன்ற வீரர்களும் கழட்டி விடப்பட்டு இருக்கிறார்கள்.