
ஐசிசி நடத்தும் டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இந்த 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடருக்கான போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது.
இதன் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு அணியும் தீவிரமான பயிற்சி ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தான் அணியும் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கு ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஷாஹின் அஃப்ரிடியை அப்பதவியிலிருந்து நீக்கி, பாபர் ஆசாம் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து பாபர் ஆசாம் விலகினார். இதனையடுத்து பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக ஷான் மசூதும், டி20 அணியின் கேப்டனாக ஷாஹீன் அஃப்ரிடியும் நியமிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் தலைமையில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை.