
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா தான் ஆடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வீறுநடை போட்டு வருகிறது. இந்தியா எப்படியும் உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. இறுதிப் போட்டியில் பங்கேற்கும் அணியின் வீரர்கள் தான் உலகக்கோப்பை தொடர் நாயகன் விருதை வெல்வார்கள். அந்த வகையில் ஷேன் வாட்சனிடம் உலகக்கோப்பை தொடர் நாயகன் விருதை யார் வெல்வார் என கேட்ட போது ரோஹித் சர்மா பெயரைக் கூறினார்.
ஷேன் வாட்சன் இது பற்றி கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை, உலகக்கோப்பை தொடர் நாயகனாக ரோஹித் சர்மா இருப்பார் என்று நினைக்கிறேன். அவர்தான் இந்த தொடரை உயிர்ப்புடன் வைத்துள்ளார். அவர் பேட்டிங் செய்வதைப் பார்க்க மிகவும் அற்புதமாக இருக்கிறது. உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக முதல் பந்திலிருந்து ஆட்டத்தை கையில் எடுத்துக் கொள்கிறார். மேலும், அவர் இந்த தொடரின் இறுதி வரை அதே போன்ற ஆட்டத்தை தொடரப் போகிறார் என்று நான் நம்புகிறேன். எனவே அவர்தான் என்னைப் பொறுத்த வரி நம்பர் 1." என்றார்.
இந்தியா தவிர்த்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளும் சிறப்பாக ஆடி வருகின்றன. அந்த அணிகளின் வீரர்களும் சிறப்பாக ஆடி வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் ஜம்பா, தென்னாப்பிரிக்காவின் ஜான்சென் இருவரும் 13 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளனர்.