
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில், இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.
முன்னதாக அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டியில் பஞ்சாப் அணி தரப்பில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 87 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்ததுடன் இறுதிப்போட்டிக்கும் அழைத்து சென்றிருந்தார்.
அதேசமயம் இப்போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் ஷஷாங்க் சிங் 3 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தது அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்திருந்தது. இருப்பினும் ஸ்ரேயாஸின் அதிரடியான ஆட்டம் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. இருப்பினும் அந்த போட்டியில் ஷஷாங்க் சிங் ஆட்டமிழந்ததை அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அவர் மீது மிகுந்த கோபமடைந்தார், அப்போது அவர் ஷஷாங்கிடம் சில மோசமான வார்த்தைகளையும் கூறியிருந்தார்.