
ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக செயல்படுவாரா, குல்தீப் யாதவிற்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்குமா, கருண் நாயர் டெஸ்ட் அணியில் கம்பேக் கொடுப்பாரா என பல்வேறு கேள்விகளுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இடம் கிடைக்குமா என்ற சந்தேகங்களும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சாய் சுதர்ஷனை இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு வரும் சாய் சுதர்ஷன் 9 போட்டிகளில் 456 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்த்க்கது.