
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றதுடன், இலங்கையை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது.
அதன்படி இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இலங்கை அணி சொந்த மண்ணிலேயே டி20 தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளதால், ஒருநாள் தொடரில் கம்பேக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேசமயம் கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயல்படும் முதல் ஒருநாள் தொடரையும் இந்திய அணி வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்றைய தினம் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் இணைந்து கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.