
நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்தது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 398 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.
இதில் நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி தனது 50ஆவது ஒருநாள் சதத்தை அடித்து இருந்தாலும் நான்காவது வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் அவருக்கு இணையாக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக ரன்களின் எண்ணிக்கையை விரைவாக உயர்த்திய அவர் 70 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 8 சிக்சர்கள் என 105 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது சிறப்பான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்.