
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையிலும், இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டுள்ளது.
இத்தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவினாலும், ஸ்ரேயாஸ் ஐயர் தனது சிறந்த தலைமைத்துவ திறமையால் ரசிகர்கள் மட்டுமல்ல, நிபுணர்களின் இதயங்களையும் வென்றுள்ளார். அதற்கேற்றவாறு ஸ்ரேயாஸ் ஐயர் இத்தொடரில் அணியை சிறப்பாக வ்ழிநடத்தியதுடன் பேட்டிங்கிலும் அற்புதமாக செயல்பட்டுள்ளார். அதன்படி இத்தொடரில் 17 போட்டிகளில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 50.33 என்ற சராசரியில் 175.07 ஸ்ட்ரைக் ரேட்டில் 604 ரன்கள் எடுத்துள்ளார்.
இதுதவிர்த்து அவர் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டிலும் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக நடந்து முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரராக இருந்ததுடன், அணி சாம்பியன் பட்டத்தை வென்றதிலும் முக்கிய பங்கினை வகித்துள்ளார். இருப்பினும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் புறக்கணிக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.