Advertisement

எந்த இடத்திலும் விளையாட தயாராக இருக்கிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!

பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் விளையாட தயாராக இருக்கிறேன் என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 26, 2023 • 13:30 PM
எந்த இடத்திலும் விளையாட தயாராக இருக்கிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
எந்த இடத்திலும் விளையாட தயாராக இருக்கிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்! (Image Source: Google)
Advertisement

இந்தூரில் நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி ஷுப்மன் கில் 104 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்கள் என ஆகியோரது சதத்தால் 5 விக்கெட்டுக்கு 399 ரன்கள் குவித்தது. பின்னர் ஆஸ்திரேலியா விளையாடிய போது மழை குறுக்கிட்டதால் 33 ஓவர்களில் 317 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அதை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா 28.2 ஓவர்களில் 217 ரன்னில் ஆல்-அவுட் ஆகி தோற்றது.

இந்நிலையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், “காயத்தில் இருந்து மீண்டதும் எனது மறுபிரவேசம் வலுவாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். நல்ல தொடக்கத்தை பெரிய ஸ்கோராக மாற்றும் வாய்ப்புக்காக காத்திருந்தேன். இந்த ஆட்டத்தில் அதை செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனது திறமை மீது எனக்கு சந்தேகம் கிடையாது. ஏனெனில் வலை பயிற்சியில் அருமையாக பேட்டிங் செய்தேன். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக்கில் எனது தொடக்கம் சிறப்பாக அமைந்தது. 

Trending


ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடிவிட்டால் பழைய நிலையை எட்டிவிடுவேன் என்பது தெரியும். காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பிய பிறகு அடித்த இந்த சதத்தை எனது சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக கருதுகிறேன். பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் விளையாட தயார். அணி நிர்வாகத்துக்கு என்ன தேவையோ அதை செய்ய தயாராக உள்ளேன். விராட் கோலி உலகின் தலைச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். அவரிடம் இருந்து 3ஆவது வரிசை இடத்தை தட்டிப்பறிக்க வாய்ப்பே இல்லை. என்னை பொறுத்தவரை எந்த வரிசையில் ஆடினாலும் தொடர்ந்து ரன் குவிக்க வேண்டும் என்பதே விருப்பம்” என்று தெரிவித்துள்ளார். 

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணிக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், பும்ரா திரும்புகிறார்கள். அதே சமயம் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் மேலும் சில நாட்கள் ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் இந்த ஆட்டத்திற்கு திரும்ப வாய்ப்பில்லை. ஷுப்மன் கில், ஷர்துல் தாக்குருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஆசிய கிரிக்கெட் போட்டிக்காக ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ்குமார் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement