
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் குவித்த நிலையில் தற்போது இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. 289 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 28 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இதனை அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் விக்கெட் கீப்பர் கே எஸ் பரத் களத்திற்கு வந்தார். அப்போது தான் தெரிந்தது ஸ்ரேயாஸ்க்கு திடீரென்று முதுகு விலா பகுதியில் வலி ஏற்பட்டதால் அவர் நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார். அங்கு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
ஏற்கனவே காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் பங்கேற்காத நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தான் திரும்பினார். தற்போது மீண்டும் அவருக்கு வலி ஏற்பட்டுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் அவர் பங்கேற்பாரா என்று தெரியவில்லை. மேலும் இது காயத்தால் ஏற்பட்ட வழியாக இருக்காது என்று கூறப்படுகிறது.