
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது நேற்றைய தினம் சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.
அந்தவகையில் நடைபெற்று முடிந்த இந்த மெகா ஏலத்தில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. முன்னதாக கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணிக்கு மூன்றாவது ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார். இருப்பினும் இந்த வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே அவரை கேகேஆர் அணி நிர்வாகம் விடுவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதன்பின் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்ற அவர் தனது அடிப்படை தொகையாக ரூ.2 கோடியை நிர்ணயித்திருந்தார். அந்தவகையில் அவரை ஏலத்தில் எடுப்பதற்காக பல அணிகள் போட்டியிட்ட நிலையில், இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது அவரை ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.