IND vs AUS, 2nd ODI: சதமடித்து அசத்திய ஷுப்மன் கில்; சாதனை பட்டியல் இதோ!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர் ஷுப்மன் கில் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தனது 6ஆவது சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி இந்தூரில் தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் பும்ராவிற்குப் பதிலாக பிரஷித் கிருஷ்ணா இடம் பெற்றுள்ளார்.
இதே போன்று ஆஸ்திரேலியாவில் மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், பேட் கம்மிஸ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹசல்வுட் மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
Trending
இதில், கடந்த போட்டியில் 71 ரன்கள் எடுத்த கெய்க்வாட் இந்தப் போட்டியில் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்து வருகின்றனர். இதற்கிடையில் மழை குறுக்கீடு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது.
இதில், கில் 37 பந்துகளில் தனது 10ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதே போன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியிலும் கில் 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் ஒரு நாள் போட்டியில் 47 ரன்கள் எடுத்திருந்த போது சிக்ஸர் அடித்து 9ஆவது அரைசதம் அடித்தார். அதே போன்று இன்ரும்46 ரன்கள் எடுத்திருந்த போது சிக்ஸர் அடித்து 10ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
ஆதன்பின்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷுப்மன் கில் 92 பந்துகளில் தனது ஆறாவது சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 104 ரன்களை எடுத்த நிலையில் ஷுப்மன் கில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இன்றைய போட்டியில் சதமடித்ததன் மூலம் ஷுப்மன் கில் பல்வேறு சாதனைகளை தன்வசப்படுத்தியுள்ளார்.
அதன்படி குறைந்த இன்னிங்ஸில் 6 சதங்களை பதிவுசெய்த முதல் இந்திய வீரர் எனும் ஷிகர் தவானின் சாதனை முறியடித்து ஷுப்மன் கில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக ஷிகர் தவான் 46 இன்னிங்ஸில் 6 சர்வதேச ஒருநாள் சதங்களை அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. அதனைத்தற்போது ஷுப்மன் கில் 35 இன்னிங்ஸில் கடந்து சாதனைப் படைத்துள்ளார்.
மேலும் ஒரு ஆண்டில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களைப் பதிவு செய்த இந்திய வீரர்கள் பட்டியளில் ஷுப்மன் கில் இடம் பிடித்துள்ளார். இப்பட்டியளில் விராட் கோலி 2012, 2017, 2018, 2019 ஆகிய வருடங்களில் 5 மேற்பட்ட ஒருநாள் சதங்களை விளாசி முதலிடத்திலும், ரோஹித் சர்மா 2017, 2018, 2019 ஆகிய வருடங்களில் 5 மேற்பட்ட ஒருநாள் சதங்களை விளாசி இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
மேலும் 25 வயதிற்கு முன்னதாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியளில் சச்சின் டெண்டுல்கர், கிரேம் ஸ்மித், உபல் தரங்கா, விராட் கோலி ஆகியோரைத் தொடர்ந்து ஷுப்மன் கில்லும் இப்பட்டியளில் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.
அதோடு, இந்த ஆண்டில் மட்டும் அதிக சிக்ஸர்கள் அடித்திருந்த ரோஹித் சர்மாவின் 43 சிக்ஸர்கள் சாதனையை ஷுப்மன் கில் முறியடித்துள்ளார். இந்தப் போட்டியில் முதல் 2 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக சர்மாவின் அதிக சிக்ஸர்கள் சாதனையை முறியடித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now