
டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 12 போட்டிகளில் 9 வெற்றிகள் 3 தோல்விகளைச் சந்தித்து 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்தை பிடித்துள்ளதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதிபெற்று அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்தியதுடன் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்ஷன் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார்.
இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மான் கில் 53 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 93 ரன்கள் எடுத்ததுடன் நடப்பு ஐபிஎல் தொடரிலும் 600 ரன்களையும் கடந்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் கேப்டனாக 600 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த ஆறாவது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மட்டுமே இதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.