
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நாக்பூரில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்னதாக இரு அணி வீரர்கள் பங்கேற்கும் கடைசி ஒருநாள் தொடர் இது என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
முன்னதாக இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. இதில் அணியின் கேப்டனாக ரோஹித் சரமா நீடிக்கும் நிலையில், அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு காயத்தில் இருந்து மீண்டுள்ள குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதசமயம் காயத்தால் அவதிப்பட்டு வரும் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இத்தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில், ஒரு தொடரில் சிறப்பாக விளையாடாததை வைத்து ஒட்டுமொத்த வீரர்களை மதிப்பிட முடியாது என்று கூறியுள்ளது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.