
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து காயம் காரணமாக நட்சத்திர விராட் கோலி விலகினர். அதன்படி அவரது முழங்காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக இப்போட்டியில் அவரால் விளையாட முடியவில்லை. இதன் காரணமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக வீரராக களமிறங்கியதுடன், அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில் மூன்றாம் இடத்தில் களமிறங்கினார்.
இந்நிலையில் இத்தொடரின் இரண்டாவது போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் விராட் கோலியின் உடற்தகுதி குறித்து ஷுப்மன் கில் அப்டேட் வழங்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 'விராட் கோலி காலையில் எழுந்தபோது, அவரது முழங்காலில் சிறிது வீக்கம் இருந்தது. நேற்றைய பயிற்சி அமர்வு வரை அவர் நன்றாக இருந்தார். கவலைப்பட ஒன்றுமில்லை. அடுத்த ஆட்டத்திற்கு அவர் நிச்சயமாகத் தகுதி பெறுவார்' என்று கூறியுள்ளார்.