
இந்திய அணி உலகக்கோப்பையின் நான்காவது நாளான நாளை வளம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்த்து விளையாட இருக்கிறது. உலகக் கோப்பையை பொறுத்தவரை ஆஸ்திரேலியா அணியின் கையே இந்திய அணிக்கு எதிராக ஓங்கி இருக்கிறது. ஐந்து முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றியவர்கள் என்பதால் இந்தப் புள்ளி விபரம் ஆச்சரியம் கிடையாது.
மேலும் இந்தியா - பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டியை விட இந்தியா - ஆஸ்திரேலியா மோதிக் கொள்ளும் போட்டி தான் மிகவும் முக்கியத்துவமானது எதிர்பார்ப்பு மிக்கது என்கின்ற பேச்சு இந்திய தரப்பில் இருந்து வந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து இதற்கு எதிர்வினையாக, இந்தியா -ஆஸ்திரேலியா மோதும் பொழுது, இந்தியாவின் சாலைகளில் வாகனங்கள் குறைந்திருக்குமா? என்று பதில் கேள்வி வைக்கப்பட்டது.
இந்த கருத்து மோதலின் காரணமாக இந்தியா ஆஸ்திரேலியா போட்டிக்கு இன்னும் முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது. இப்படியான நிலைமையில் இந்த ஆண்டு முழுவதும் தன் கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச் சிறந்த பார்மில் இருக்கும் இளம் வீரர் ஷுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்கின்ற செய்தி கவலையான ஒன்றாக இருக்கிறது.