
ENG vs IND, 4th Test: மான்செஸ்டரில் நடைபெற இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார் என்பது உறுதியுள்ளது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டி எதிர்வரும் ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தற்சமயம் இங்கிலாந்து அணி இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வரும் நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்ற சந்தேகங்கள் எழுந்திருந்தன. ஏனெனில் இத்தொடருக்கு முன்னதாகவே பணிச்சுமை காரணமாக ஜஸ்பிரித் பும்ரா 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று கூறப்பட்டது. இதில் அவர் ஏற்கெனவே இரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில் இப்போட்டிக்கான லெவனில் இடம்பெறுவாரா என்ற கேள்விகளும் அதிகரித்திருந்தது.